"வானின் மழை வீழும் - தரை
வாடும் பயிர் வாழும்
வானின் மழை வாராவிடில்
வாழும் பயிர் வாடும்.

வாடும் பயிர் வாழ்வும் - உயிர்
வாழும் பயிர் தாழ்வும்
தேடிப் பெயல் எனும் கொள்கை(அத்)
தேனார் மழைக்கில்லை.

எனினும்

வானின்று அருள் பொழியும் - தரை
வாடும் பயிர் வாழும்.

கதிரால் திசை ஒளிரும் -- புவி
கண்டே முகம் மலரும்
கதிரே புவி காணாதெனில்
கரையாது இருட்கரையே.

இருள் ஏகிட என்றோ -- ஒளி
இனிதாகிட என்றோ
வருகின்றதோர் கொள்கை
ஒளிவளரும் கதிர்க்கில்லை.

எனினும்

கதிரால் திசை ஒளிரும் -- புவி
கண்டே முகம் மலரும்.

உயிர் என்பனும் துயரோ -- அருள்
உளதென்பதோர் உளவோ
பெயு மாமழை வெயில் தாரகை
பிறிதுள்ளவை எல்லாம்

ஏனென்றதை யார் கண்டவர்
ஏதே பொருள் தெரிவார்
வானுண்டு அதன் கீழே உருள்
வையம் எனல் அல்லால்.

0 comments: