வாசனையுமுண்டு
வாடுவதுமில்லை
நீ பூத்தப் பூவா? ப்ளாஸ்டிக் பூவா?
நீ களைந்து எறிந்த ஆடையாய்க் கலைந்து கிடக்கிறது மேகக் கூட்டம்.உற்றுப் பார்த்தால் அதில் ஒரு மானோ, ஒரு மயிலோ, அல்லது ஓர் இதயமோ தெரியலாம்.பார்த்துக் கொண்டே இருக்கும்போது ஒரு மலரின் வடிவம், பெண் முகமாய் மாறலாம், ஏன் உன் முகமாய்க் கூட மாறலாம்.வேகமாய் செல்லும் மேகம் சூரியனை நெருங்க நெருங்க மேகத்தின் நிழல் உன்மேல் படரும். மேகத்துக்கு நன்றி.சூரியனைக் கொஞ்சி விட்டு மேகம் விலக விலக நிழல் விலகி மறுபடி வெயில் வரும். பதறிப் போவேன் நான்.மேகம் கொஞ்சி விட்டுப் போன சூரியன் முகத்தில் புதிதாய் இருக்கும் ஓர் ஒளி.இந்த மேகத்துக்கு தான் எத்தனை வண்ணம்? வெயிலில் வெள்ளை. மழையில் கருப்பு. மாலையில் அது நடத்தும் வர்ண ஜாலம்.எல்லாம் இருந்தும் கடைசியில் கலைந்தோ, கரைந்தோ போகிறது! காதலைப் போல…எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?
மழையில் நனைந்ததும்,
மேகத்தைத் துவட்டிக்
கொள்கிறாய்!
மழையை ரசிக்கத் தெரியாதவனுக்குக் காதலையும் ரசிக்கத் தெரியாது.
மழையே வராமல் கிடக்கும் நிலத்தின் வெடிப்பு.மாலை நேரத்து மெல்லிய சாரல். வெயிலோடு சேர்ந்து பொழியும் மழை.உலகத்தையே சுத்தப்படுத்தும் உன்னத மழை. மழை நின்றும் விடாத தூவானம். மழை முடிந்து வீசும் மண் வாசம்.காற்று, புயல், சூறாவளியில் சிக்கினாலும் விடாது பொழியும் மழை. பெருமழையில் அடித்து செல்லப்பட்ட வீடு.மழையின் இத்தனைப் பரிமாணங்களும் காதலிலும் உண்டு.
மழையில் நனைந்து விட்டு வெயிலில் குளிர் காயலாம். காதலில் நனைந்து விட்டுக் காமத்தில் குளிர் காயலாம்.மழையிலும் சரி, காதலிலும் சரி நனையும் வரை நஷ்டமில்லை. நனையாவிட்டால் ஒரு லாபமுமில்லை.எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?
மழையில் குடை…
குடைக்குள் நாம்…
நமக்குள் மழை!
0 comments:
Post a Comment